Tuesday, April 1, 2014

அனிமல் பார்ம் (1999, அமெரிக்கா)


பெயரைக் கேட்டாலே சும்மா அதிருதில்ல. ஆம் 1945-ல் வெளிவந்த ஜார்ஜ் அர்வலின் (George Orwell) நாவலில் இருந்து தழுவி எடுக்கப்பட்ட படம். என் கல்லூரி பாடத்தில் ஒரு பகுதியாக இருந்தது இந்த நாவல். என்னத்தான் நான் விரும்பும் தத்துவத்திற்கு எதிர்நிலையில் இந்த நாவல்/படம் இருந்தாலும் மாற்றுச்சிந்தனையை ஊக்குவிக்கும் வகையில் இப்படத்தை பதிவு செய்கிறேன்.

கதை நடக்கும் களம் “மனோ பார்ம்” (Manor Farm). ஜோன்ஸ் (Jones) என்பவன் இப்பண்ணையை நடத்தி வருகிறான். எப்போதும் குடிபோதையில் இருக்கும் இவன் பண்ணையை சரிவர பார்த்துக்கொள்வதில்லை. இதனால் பிற பண்ணை முதலாளிகளிடம் பணம் பெறுகிறான். பல காலமாக தாங்கள் உள்ள இழிவுநிலையிலிருந்து மீட்கப்பட வேண்டும் என்று நினைக்கின்றன பண்ணையிலுள்ள விலங்குகள். மற்ற விலங்குகளை விட பன்றிகள் எழுதப்படிக்க தெரிந்து வைத்துள்ளதால் அவைகள் தலைவர்கள் பதவியில் உள்ளது. ஓல்டு மேஜர் (Old Major) என்ற பன்றி இவர்களுக்கு தலைவனாக ஏழு கட்டளைகளை உருவாக்குகின்றது.

உணவு சரிவர வழங்காத நிலையில் பண்ணையில் உள்ள விலங்குகள் புரட்சியில் இறங்குகின்றன. ஜோன்சும் அவனது மனைவியும் பண்ணையிலிருந்து விரட்டப்படுகின்றனர். இச்சண்டையில் ஓல்டு மேஜர் (Old Major) விபத்துக்குள்ளாகி இறந்து விடுகிறார். அடுத்த நிலையில் உள்ள ஸ்னோபால் (Snowball) என்ற பன்றி தலைவனாகிறது. ஸ்னோபாலின் இந்த வளர்ச்சியை விரும்பாத நெப்போலியான் (Napoleon) மற்றும் ஸ்குவிலர் (Squealer) ஸ்னோபாலை விரட்டிவிட்டு ஆட்சியை பிடிக்கின்றன. ஏழு கட்டளைகளும் திருத்தி அமைக்கப்படுகிறது. எப்படி டெல்லியில் காங்கிரஸை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி போட்டியிட்டு பிறகு அவர்கள் தயவால் ஆட்சிக்கு வந்ததோ அதே முறையில் முதலில் மனிதர்களை பண்ணையிலிருந்து விரட்டிய பன்றிகள் பிற்காலத்தில் அவர்களுடன் நட்பு பாராட்டுகின்றனர். பிற விலங்குகள் அடிமைகளாக நடத்தப்படுகின்றது. மற்ற விலங்குகளுக்கு சுதந்திரம் கிடைத்தனவா என்பது தான் கதை.

நவீன உலக வரலாற்றை தெரிந்தவர்கள் இக்கதையில் உள்ள நய்யாண்டித்தனத்தை புரிந்துகொள்ளலாம். ரஷ்யாவில் நடந்த கம்யூனிச புரட்சியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம்.

பப்பெட்ரி (Puppetry) மற்றும் அனிமேஷன் (Animation) கலந்து மிகவும் துல்லியமாக சித்தரிக்கபட்டுள்ளது. வழக்கத்தை போல் நாவலைப் படித்தவருக்கு இப்படம் பிடிப்பது கடினம். அதேபோல் நாவலை படிக்காதவருக்கும் இப்படத்தை follow பண்ணுவது கொஞ்சம் கஷ்டம்.

படத்தை பார்தவங்க தங்கள் கருத்தை சொல்லுங்க. பார்காதவங்க பாத்துட்டு சொல்லுங்க.


No comments:

Post a Comment