Showing posts with label Tamil Writing. Show all posts
Showing posts with label Tamil Writing. Show all posts

Thursday, August 4, 2016

மேடம் நீங்க..

சிறுகதை


“எல்லாம் முடிஞ்சதா”

“இன்னியோட எல்லாத்துக்கும் ஒரு முழுக்கு”

“டிவியில பார்த்தேன். கூட்டம் போல. நான் கூட வரேன்னு சொன்னேன். நீ தான் கேட்கல”

“பரவாயில்ல. நீ என்ன தைரியமா வளர்த்திருகேன்னு வெச்சிக்கோ.. ஹிஹி”

“ம்ம்.. சாப்பிட்டியா”

“ம்.. வக்கீல் வீட்டுல சாப்பிட்டேன்”

“அவரு இல்லேனா இந்த கேஸ் இன்னும் இழுத்திருக்கும் இல்ல..”

“ம்ம்.. ஆமா”

“உன்ன தேடி உன் ஆபிஸில் இருந்து.. ராமோ.. ராமுவோ ஒருத்தரு வந்தார். உன்ன போன்ல பிடிக்க முடியலையாம், கிடச்சாலும் நீ கால் எடுக்கலியாம்..”

**********

என்ன கதை படிப்பவர்களே, ஒண்ணுமே புரியவில்லையா. இது நானும் என் அம்மாவும் பேசிக்கொள்வது. நான் யாரு ? என் பெயர் @#$%. இது என்ன @#$%னு கேட்குறிங்களா ? இருங்க மேல சொன்ன கதையை கொஞ்சம் தெளிவா சொல்லுறேன்.

**********

ஆட்டோ வீட்டின் முன் நின்றது. இறங்கும் முன் மீட்டரை பார்த்தேன் – 110.00. டிரைவரிடம் நூற்றியிருபது ரூபாய் கொடுத்தேன். அவர் பத்து ரூபாய் திருப்பிகொடுத்தார்.

மனதிற்குள், “பரவாயில்லையே சென்னைல இப்போ ஆட்டோவில் change எல்லாம் தற ஆரம்பிச்சிட்டுடாங்களே!”

Change வாங்கிக்கொண்டு திரும்புகையில், ஆட்டோ டிரைவர் என்னிடம் “மேடம் நீங்க..”

அவர் என்ன கேட்க வந்தார் என்று எனக்கு தெரியும், ஆனால் அதை காதில் வாங்காத மாதிரி gateய் திறந்து நான் வீட்டிற்குள் வந்தேன்.

அம்மா எனக்கா காத்திருந்தாள். என்னிடம் இருந்த papersசை வாங்கிக்கொண்டாள்.

“எல்லாம் முடிஞ்சதா” என்று கேட்டாள்.

“இன்னியோட எல்லாத்துக்கும் ஒரு முழுக்கு” என்று பேரு மூச்சுவிட்டு sofaவில் சாய்ந்தேன்.

அம்மா தண்ணி tumblerரை எனக்கு நீட்டியவாரு தொடந்தாள், “டிவியில பார்த்தேன். கூட்டம் போல. நான் கூட வரேன்னு சொன்னேன். நீ தான் கேட்கல”

“பரவாயில்ல. நீ என்ன தைரியமா வளர்த்திருகேன்னு வெச்சிக்கோ.. ஹிஹி” என்று சொல்லி நான் பல நாட்கள் கழித்து சிரித்தேன்.

நான் இப்படி சிரித்ததை பார்த்து மனதிற்குள் சந்தோஷபடும் அம்மா, அதை வெளிக்காட்டாமல் “ம்ம்.. சாப்பிட்டியா” என்று கேட்டாள்.

“ம்.. வக்கீல் வீட்டுல சாப்பிட்டேன்”

“அவரு இல்லேனா இந்த கேஸ் இன்னும் இழுத்திருக்கும் இல்ல..”

“ம்ம்..ஆமா” நான் என் போனை எடுத்து எனக்கு வந்த கால்களை பார்த்தேன்.

“உன்ன தேடி உன் ஆபிஸில் இருந்து.. ராமோ.. ராமுவோ.. ஒருத்தரு வந்தார். உன்ன போன்ல பிடிக்க முடியலையாம், கிடச்சாலும் நீ கால் எடுக்கலியாம்..” என்றாள் அம்மா.

**********

இப்போ கொஞ்சம் தெளிவாக இருக்கா.. அந்த ஆட்டோ டிரைவர் என்ன ஏதோ கேட்க வந்தார் இல்ல! என் பெயர் எதுக்கு @#$%னு சொன்னேன் தெரியுமா. பாதிக்கப்பட்வர்களின் அடையாளத்தை வெளியிடக்கூடாது. அதுதான் ஊடக தர்மம். இந்த தர்மத்துக்கு கட்டுப்பட்டு நான் எழுதுறேன். ஆனால் என்னதான் டிவியில் காட்டிட்டாங்களே.. பெயர் கூட சொல்லிட்டாங்க.. விவாதிச்சிட்டாங்க.. ஆனா நான் சொல்லமாட்டேன். உங்க கற்பனைக்கே விட்டுடறேன். 26 வயதுல்ல, இப்போதிக்கு சுடிதார் போட்ட பெண். இப்போ கதைய தொடருவோம்.

**********

”…. போன்ல பிடிக்க முடியலையாம், கிடச்சாலும் நீ கால் எடுக்கலியாம்..” என்றாள் அம்மா.

”கோர்ட் உள்ள இருக்கும் போது எப்படி..” என்று நான் சொல்லும் போது எனது போனின் vibrator சிணுங்கியது.

“ஹலோ”

“………………………………………………”

“ஆமாம் நான் தான் @#$%”

“…………………………………………………………………………………………………………………………”

“ம்ம்.. சொல்லுங்க கார்த்திக் ..”

“……………………………………………………………………………………………………………………………………………………..………”

“சரி அதுக்கு என்ன?”

“……………………………………………………………………………….”

“இல்ல சார், இப்போதான் எல்லாம் முடிஞ்சிருக்கு”

“……………………………………………………………………………………………………………”

“வேணாம் சார்”

“……………………………………………………………………………………………………………………”

“இல்ல.. கொஞ்ச நாள் கழித்துப்பார்ப்போம்.. ஸாரி..”

போனை கட் செய்தேன். “யாரு ஆபிஸில் இருந்தா” என்றாள் அம்மா.

”இல்ல.. டிவியில எதோ talk showவாம்.. இன்னிக்கு ஒன்பது மணிக்கு”

“போறியா”

“ஏன் நான் இன்னும் பிரபலம் ஆவனுமா. இப்பயே என்னால சுதந்திரம நடமாட முடியல. எல்லோரும் ஒரு மாதிரியா பாக்கறாங்க”

“தைரியமா இருக்கனும்” என்றாள் அம்மா.

அம்மா இப்படித்தான் புலம்பி புலம்பியே எனக்கு தைரியமாக இருக்க சொல்லிக்கொடுத்தாள். அன்றிறவு எனக்கு தூக்கம் வரவில்லை.

**********
நான் ஏதோ பாதிக்கப்பட்டதாக முதலில் சொன்னேன் இல்ல.. ஆமாம் ஒரு வருஷத்துக்கு முன்னால் எ… தூக்கம் வந்துடுச்சி…
**********

காலையில் ராமிடம் இருந்து எனக்கு போன் வந்தது. இன்னிக்கே ஆபிஸுக்கு வரேன்னு சொன்னேன்.

“ஒரு வாரம் பத்து நாள் கழிச்சி போலாமில்ல” என்றாள் அம்மா.

“இல்ல வேலைக்கு போனா refreshingகா இருக்கும்”

“சொன்னா எங்க கேட்கப்போகுற. எத்தனை மணிக்கு வண்டி வரும்?”

”மதியம் ஒரு மணிக்கு..”

“சரி நீ டிவி பாரு.. அதுக்குள்ள நான் சமையல் ready பண்ணுறேன்” என்று சொல்லிக்கொண்டு அம்மா சமையல் அறையினுள் நுழைந்தாள்.

நான் டிவியை அணைத்தேன். 

“அம்மா கொஞ்ச நாள் டிவி, நியூஸ் பேப்பர் எல்லாம் என் கண்ணுல காட்டாதே” என்றேன்.

அம்மாவுக்கு புரிந்திருக்கும்.

மதியம் 1:30 மணிக்கு வண்டி வந்தது. Tempo Traveller. வண்டியின் கதவை திறந்ததும், “மேடம் நீங்கதான் @#$%” என்றார் டிரைவர்.

“ஆமா” என்று சொல்லிக்கொண்டே நான் உள்ளே சென்றேன். எட்டு..பத்து பேர் உள்ளே இருந்தார்கள். எல்லோரும் புதிய முகங்கள். எல்லோர் முகத்திலும் “இது.. அவங்களா..” என்பது போன்ற reaction. நான் காலியாக இருந்த ஒரு ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்தேன். ஒரு மணி நேர பயணம். யாரும் எதுவும் பேசவில்லை.

**********
நைட் என் கதையை சொன்னேனா ? ஓ அரம்பிக்கவேயில்லையா.. ஒரு வருஷம் முன்னால என்ன ஒருத்தன்.. அது என்ன ஒருத்தன் ஒருத்தர்னு கூட சொல்லலாம்.. வண்டி ஆபிஸின் முன் நின்றது. 
**********

எல்லோரும் இறங்கினார்கள். நான் கடைசியாக இறங்கினேன், முன்னால் நடந்தவர்கள் ஏதோ பேசிக்கொண்டே என்னை பார்த்தும் பார்க்காதது போல ஒரு மாதிரி திருப்பியும் திரும்பாமல் கழுத்தை திருப்பி என்னை பார்த்தனர்.

ஆபிஸில் பாதி பேர் தெரியாத முகங்கள். தெரிந்தவர்களும் தெரியாதவர்கள் போல் முகத்தை மாற்றிக்கொண்டனர். ராம் மட்டும் என்னோடு பேசினான், அதுவும் HR என்ற முறையில்,

“இப்போதிக்கு உங்களுக்கு எந்த teamமும் கொடுக்கல. கிஷோர் QBRக்காக பிலிப்பைன்ஸ்ல இருக்கார். வர டூ டேஸ் ஆகும்” என்றான் ராம்.

“அதுவறைக்கும் நான்..”

“நீங்க ஆபிஸுக்கு வரலாம்…. உங்கள ஆபிஸுக்கு வரவைப்பதுதான் என் வேலை.. floorல எந்த teamனு managementதானே முடிவு பண்ணணும்” என்றான்.

“ம்ம்.. அதுவும் கரக்ட்”

இரண்டு நாள் இரண்டு வருடங்கள் போல் இருந்தது. யாரும் சரியால பேசவில்லை. தெரிந்தவர்கள், “ஹலோ..எப்படி இருக்கீங்க”, “welcome back..” என்று ஒண்ணு இரண்டு வார்த்தைகளை உதிர்த்துவிட்டு சென்றனர்.

மூன்றாவது நாள் கிஷோர் முன் நான் உட்கார்ந்திருந்தேன்.

அவரும் வழக்கம்போல சம்பிரதாயமான வார்த்தைகளை சொன்னார்.

“இதை கேட்டு கேட்டு அலுத்துப்போச்சி” என்று நினைக்கையில் அவர் மேலும் தொடர்ந்தார்.

“@#$% அவனுக்கு எவ்வளவு வருஷம்?”

“நாலு”

“நாலு வருஷம் ஜெயிலில் இருந்த அவன் திருந்திடுவானா @#$%?”

“தெரியாது கிஷொர். என்னோட மன திருப்திக்காக கேஸ் போட்டேன்”

கொஞ்சம் நேரம் அமைதியாக இருந்தோம். கிஷோர் தனது laptopல் எதையோ தட்டிக்கொண்டிருந்தார்.

“அடுத்த மாசம் ஒரு new team வருது @#$%”

”கிஷோர் நான் கொஞ்ச நாள் இந்த ஊரவிட்டு போகலாமுன்னு இருகேன்”

ஏன் என்பது போல முக பாவனை செய்தார்.

“அதுக்காக நான் வேலைய விடலே. Belfastல நம்ம processஓட pilot batch ஆரம்பிக்க போவதா கேள்விப்பட்டேன். அங்க .. ?”

“கஷ்டம்தான் @#$%.. நான் try பண்ணுறேன்..”

ஒரு மாதம் கழித்து சென்னை விமான நிலையத்தில் இதை எனது டைரியில் எழுதிக்கொண்டிருக்கிறேன். 
**********

அப்புறம் ஒரு வருஷம் முன்னால என்ன ஆச்சின்னு கேட்குறிங்களா? அட அதை விடுங்க. அந்த நிகழ்வுகள் உங்களைப்போன்ற மக்களின் மனதைவிட்டு மறையதான் நான் ஊரைவிட்டு கொஞ்ச நாள் தள்ளிப்போறேன். அப்புறம் பார்க்கலாம்.
***


வேறு சிறுகதைகள்

நீ என்ன பாரதி கண்ட புதுமைப்பெண்ணா 

Monday, August 1, 2016

ஜிம்மியின் சொர்கம் எப்படி இருக்கும்?



ஆயத்தமின்றி கிறுக்கிய வரிகள் சில.

**1**

டேய் செவ்வாய்கிழமை ஏண்டா முடி வெட்டிக்கபோற என்று நண்பன் கேட்டதும் அம்மாவின் நியாபகம் வந்தது. 

**2**

வாத்து முட்டை போட்டால் ஆம்லேட் செய்யலாம் என்று காத்திருந்த போது, வாத்து பொன் முட்டையிட்டது. சா ஆம்லேட் போச்சே :-(

**3**

மளிகை கடையில்,
-வேற என்ன வேணும் சாமி என்றார் கடைக்காரர்
-சாதார்ணமா கூப்பிடுங்க என்றான்
-ஹி ஹி அப்படியே பழகிடுச்சி என்றார் சிரித்துக்கோண்டே

**4**

சாமி கும்பிட்டா சொர்கத்துக்கு போகலாம் என்ற அம்மாவிடம். ஜிம்மியும் (நாய்) நம்ம கூட வருமாமா என கேட்டது குழந்தை.

**5**

சவக்கிடங்கில்,

-அனாத பொணம்.. செத்து ரெண்டு மூணு நாள் இருக்கும் போல..
ஒரு வாரமாச்சிடா என்று மனதிற்குள் நினைத்தது பிணம்

****

**Above illustration along with the post is by the blogger



Tuesday, July 19, 2016

எங்கும் நடக்கலாம்


**இந்தியாவின் ஒரு பெருநகரத்தில்**

வைத்த கண் வாங்காமல் தனது laptopன் வலதுப்பக்க மூலையில் இருக்கும் chat windowவை பார்த்துக்கொண்டிருந்தாள் ப்ரியா.

“இப்படியே Sunday eveningக ஓட்டிருவோமா ?” என்று சொல்லிக்கொண்டு அறையினுள் வந்தான் ரகு.

ப்ரியா அவனுக்கு பதில் சொல்லாமல் laptop screenனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

“யாரு.. உங்க பாஸ்ஸா?”

“ம்ம்”

“காலையில் இருந்து நாலு தடவை பேசியாச்சி திருப்பவும் என்ன ?”.

“வேற என்ன complaint raise பண்ணவேணாமுன்னு சொல்றாரு..”

“சரின்னு சொல்லிட்டு offlineல வா. நமக்கு இருக்குறது ஒரு நாள்தான் free. இதுல இந்த tension தேவையா! வீட்டுக்கு things வாங்கணுன்னு சொன்னயில்ல. வா உன் favorite LB storesகு போவோம்..”

“நீங்க garageல் இருந்து காரை எடுங்க நான் two minutesல வரேன்”

***

**இந்தியாவின் ஒரு சிறுநகரத்தில்**

கண்ண திறந்ததும் இருட்டா இருந்திச்சி. எங்க இருக்கோமுன்னு தெரியல. எங்கயோ படுத்துட்டு இருக்கோமுன்னு தோணிச்சி. ஆனா எந்த எடமுன்னு தெரியல.. எழக்கூட முடியல.

“அம்மா.. மா..”ன்னு கத்தினேன். பதில் வரல. தீடிர்னு ஒரு கை என் வாய முடிச்சி. என்னால கத்தமுடியல. யாரோ என் மேல படுத்த மாதிரி அழுத்தினாங்க. படுத்த உருவத்தில் இருந்து வேர்வை கலந்த பாண்ட்ஸ் பவுடர் வாசம் வந்திச்சி. எனக்கு மயக்கமா வந்துச்சி. கொஞ்ச நேரம் கிழிச்சி அந்த உருவம் அற கதவை திறந்துச்சி.

மச்சு வீட்டு ஐயா!. 

“ஐயா”னு கத்தினேன். அவரு என்ன திருப்பி பார்த்துட்டு போயிட்டாரு.




இதுதான்மா நடந்துன்னு நான் கூறி முடிக்கையில் அம்மா தலையில் அடித்துக்கொண்டாள்.

“எழவு எடுத்தவளே. நீ எதுக்குடி அந்த வுட்டுக்கு போன”

“மாலதி கிட்ட வீட்டு பாடம் வாங்க”

“போதும் நீ படிச்சி கிழிச்சது. இனிமேல் அவங்க வுட்டுக்கு போன கால ஒடிச்சிடுவேன்”

“ஏன்மா..”

அம்மா கையில் இருந்த காபி டம்ளரை என் மேல் வீசி எறிந்தாள். அவள் கோவப்படுபவள் அல்ல. எனக்கு புரியவில்லை. கொஞ்ச நாள் கழித்து எனக்கு ஜொரம் வந்தது.

***

நேரிசல் இல்லாத அந்த ஞாயிறுகிழமை சாலையில் வண்டியை உருட்டிக்கொண்டிருந்தான் ரகு. ப்ரியா ஏதோ யோசனையில் இருந்தாள். வண்டி 90 நோடிகள் ட்ராஃபிக் சிக்னலில் நின்றது.

“மறுபடியும் என்ன யோசனை”.

“ம்ம் வேற என்ன..”

“அதுதான் complaint பண்ணலேன்னு சொல்லிட்டியே”

“இது மூணாவது தடவ ரகு!!”

“அவ்வளவு பெரிய position இருக்கிறவன் தப்பு பண்ணுறதுக்கு முன்னால யோசிக்கணும்”

“நாளைக்கு ஒரு வேள எனக்கு நடந்தால்?”

ரகு மவுனத்தை பதிலாகத்தந்தான். ப்ரியா தொடர்ந்தாள், “CTOவாச்சே.. வேளியில தெரிஞ்சா company மானம் போகும்!!”.

“அதுக்குதான் உன் பாஸ் அவனை statesக்கு அனுப்பபோறாங்களே”.

“அங்க போய் இவன் சும்மாவா இருப்பான. சிலுமிஷம் பண்ணா இண்டர்நேஷ்னல் issue ஆயிடும்”.

“அந்த பொண்னு பூஜா?”

“அவ பயந்து வேலைய விடுற stageல இருக்கா. ஆனா ஒரு மெயில் Employee Voice DLக்கு போட்டா போதும் எல்லாம் over..”

“உன்னோட team நீதான் decide பண்ணணும்” என்றான் ரகு.

கார் LB stores முன்னால் நின்றது.
***

”வாங்க சார்”.

“தேவி மூணு நாளா ஸ்கூலுக்கு வரல.. உடம்பு செரியில்லேன்னு மாலதி சொன்னா..”

“ஆமா ஜொரம்.. உட்காருங்க..”

சார் குரல் கேட்டதும் நான் அறையில் இருந்து வெளியே வந்தேன். அம்மா சாருக்கும் தெரியாமல், எதுவும் சொல்லாதே என்பது போல் கையால் சைகைக் காட்டினாள்.

“என்னாச்சு தேவி”னு சார் கேட்டதும் மளமளவேன்று என்னை அறியாமல் அன்று மச்சு வீட்டில் நடந்தது அத்தனையும் கூறிவிட்டேன்.

“போலீஸ் கிட்ட..” என்றார் சார்.

அம்மா கையெடுத்து கும்மிட்டாள், “அவங்க பெரிய எடம், அதும் ஐயா மேல எப்படி சார்” என்றாள்.

சார் ஒண்ணும் சொல்லல, “உடம்ப பாத்துகோன்”னு என் கிட்ட சொல்லிட்டு போயிட்டார்.
***

திங்கட்கிழமை காலை என்ற பரபரப்பு எதுவும் இல்லாமல் ஆப்பிஸ் கொஞ்சம் மந்தமாக இருந்தது, ப்ரியா அதை உணர்ந்தாள். பூஜாவின் முகம் வழக்கத்தைவிட இரண்டு சுற்று மேக்கப் குறைவாக இருந்தது. மேலும் அவள் முகம் வெளிரி இருந்தது. அவளுடன் பேசலாம் என்று ப்ரியா எழுந்தபோது கிஷோர் (பாஸ்) தனது அறையில் இருந்து வந்தார்.

“ப்ரியா எல்லாம் settled கணேஷ் யுஸ்க்கு பேக் பண்ணியாச்சு. அடுத்த மாசம் அவன் போயிடுவான்” என்றார் கிஷோர்.

“அப்போ பூஜா ??”

“அவ…. அவங்கதான் resign பண்ணுறாங்களே” என்றார். அவர் மொபையில் போன் அலறியது.

“I have to take this” என்று செல்லிட்டு அவருடைய அறைக்கு சென்றார்.




Laptopன் வலது ஓரத்தைப்பார்த்தாள் ப்ரியா. மனதிற்குள், ”ஹம்..பதினோன்னுதான் ஆவுது”. என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பமான மனநிலையில் இருந்தாள். Hand bagல் இருந்த அவளது போன் அலறியது. எடுப்பதற்குள் கால் கட்டாகிவிட்டது. Bagல் நேற்று LB storesன் bill இருந்ததை கவனித்து அதை எடுத்துப்பார்த்தாள்.

***

இரண்டு நாள் கழித்து சார் வீட்டுல நான் டிவி பார்த்துக்கொண்டிருக்கும் போது தெருவில் ஒரு சலசலப்பு. நாலு வீட்டு தள்ளியிருக்கும் மச்சு வீட்டுக்கு முன்னால போலீஸ் ஜீப் இருந்தது. அவங்க கூட சாரும் அம்மாவும் எதோ பேசிகிட்டு இருந்தனர். நான் ஓடி போய் அம்மாவ கட்டிபிடிசிக்கிட்டேன். ஐயா போலீஸ் கூட போயிட்டாரு. அவங்க அப்பத்தா என் அம்மாவ கெட்ட கெட்ட வார்தையா திட்டினாங்க. எங்க மேல மண்ண வாரிப் போட்டாங்க.

இதேல்லாம் நடந்து சில வாரம் கழித்து அம்மா ஒரு துணி மூட்டையுடன் என்ன சார் வீட்டுக்கு கூட்டிட்டு போனாங்க.

“சார் யாருக்கு தெரியாம இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும். இப்போ தெனமும் எங்கள இந்த ஊரு ஏசுது” என்றாள் அம்மா.

“கொஞ்ச நாளுள எல்லாம் சரி ஆயிடும்”.

அம்மா அழுதுக்கொண்டே “இல்ல சார் நாங்க இந்த ஊருல இருந்த எங்கள இவங்க கொன்றுவாங்க.. இல்ல தற்கொல பண்ண வெச்சிடுவாங்க… நாங்க ஊரவிட்டு போறோம்”.

***

பில்லின் மேல் Lakshmibai Stores என்று ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் கடையில் பெயர் கொட்டை எழுத்தில் இருந்தது. அதைப்படித்துவிட்டு ஒரு பொறி தட்டியதுப் போல் தனது மெயிலை open செய்தாள். அடுத்த அரைமணி நேரத்தில் கிட்டத்தட்ட நூறு வரிகளுடன் ஒரு மெயில் அவளின் sent itemsல் Employee Voice என்ற இமெயில் முகவரிக்கு சென்றிருந்தது.

அந்த மெயிலில் Devi Priya என்ற தனது முழுப்பெயர் இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டாள்.

***

சார் யோசித்தார்.. “சரி, அப்போ பட்டணத்துல இருக்குற என் அக்கா வீட்டுக்கு போங்க. தேவி அங்கேயே படிக்கலாம். நான் நாளைக்கு போன்ல சொல்றேன். எதுக்கும் ஒரு கடிதாசி எழுதி தரேன் சரியா” என்றார். 

அம்மா தலை அசைத்தாள். 

லட்சுமிநாதன் என்று தனது பெயரை அச்சாக கையேழுதிட்டு ஒரு கடிததை அம்மாவிடம் கொடுத்தார்.

***

**Illustrations along with the story by the blogger.




Saturday, July 2, 2016

நீ என்ன பாரதி கண்ட புதுமைப்பெண்ணா !!



”ரே ரே ரே ரஃபுதார்.. ரே ரே ரே..” என்று போன் அலறியது. Displayவில் ஜானகி அம்மா சிரித்துக்கொண்டிருந்தார்.

“ஹலோ..”

”நேத்திரா, என்ன தூக்கமா”

“ம்ம்.. எப்படிமா ஒரே ஹலோவுல நா என்ன பண்ணுறேன்னு கண்டுபிடிக்குற..”

”நாளைக்கு வீட்டுக்கு வந்ததும் சொல்லுறேன். தைரியா கிண்டி வந்துட்டான். அவனுக்கு கால் பண்ணி நம்ம வீட்டுக்கு வர வழி சொல்லு”

“மா.. GPS use பண்ணி வந்துடலாம்மா.. மாமாதான் US-ஸில் இருந்தாருன்னு சொன்னே. இது கூடவா தெரியாது”

“அவனுக்கு இதுயெல்லாம் தெரியும தெரியாதானு எனக்கு தெரியாது..”

அம்மவிடம் பேசும் போது மாமாவிடம் இருந்து 2nd call வந்தது. 

தைரியநாதன் அம்மாவின் தம்பி, எனக்கு மாமா. மத்திய அரசுல வேலைப்பார்த்தார். ஏதோ பெரிய அதிகாரியாம். அவரு பையன், மஞ்சு என்ற மஞ்சுநாத். அவன் அமெரிக்காவில் settle ஆனா பின் மாமா விருப்ப ஒய்வுப்பெற்று கலிபோர்னியாவில் ஆறு மாசம், பெங்களுரில் ஆறு மாசமுன்னு இருப்பார். எனக்கு மஞ்சுவை கல்யாணம் கட்டிக்கொடுக்க வேண்டும் என்று சில காலமாக அம்மா சூசகமா சொல்லிகிட்டுவறாங்க. எப்போதும் சதாப்தியில் வரும் மாமாவும் அத்தையும் இந்த தடவை காரில் வறாங்க. 

ஒரு வழியா போனில் directions கொடுத்து அவர்கள் வீட்டுக்கு வந்தார்கள். வந்த வேகத்தில் மாமா, “என்ன apartment இது godown மாதிரி இருக்கு, அந்த பழைய வீடே தேவல. I don’t like it”

“வீட்ட மாத்தும்போது என் கிட்ட செல்லியிருந்தா என் தம்பிகிட்ட சொல்லி சோழிங்கநல்லூர்ல..” என்று சொல்லிக்கொண்டிருந்த அத்தையை மடக்கினர் மாமா.

”ஹும் உன் தம்பியா.. பெரிய தம்பி.. நம்ம சென்னைக்கு வாரோமுன்னு தெரிஞ்சும் ஊட்டிக்கு outing போயிட்டான். Useless fellow.”

”அவன் என்ன பண்ணுவான் அவனுக்கு மூணு நாள் செர்ந்து லீவு வரதே கஷ்ட்..”

மாமா அத்தை சொல்வதை காதில் வாங்காமல் என்னைப்பார்த்து, “அவன்தான் அப்படி.. உங்க அம்மாவுக்கு அப்படி என்ன வேலை..”

நான் பதில் சொல்லும் முன் அத்தை குறுக்கிட்டு, “அதுதான் election duty இருக்குனு போன்லியே ஜானகி சொல்லிட்டாளே”

இப்படிதான் அவர்களே கேள்விக்கேட்டு அவர்களே பதில் சொல்லிப்பாங்க. எனக்கு அம்மா வழி சொந்தம் என்றாலே அலர்ஜி. இப்பேல்லாம் அமெரிக்கா பீத்தல் வேற.

”Trainலில் வந்திருக்கலாமே மாமா ?”

“அமெரிக்கவுல long drive போய் பழகிடுச்சு. பெங்களுர் டூ சென்னையெல்லாம் ஒரு தூரமே இல்ல”

வழக்கம்போல எல்லா பெங்களுர் வாசிகள் போல சென்னை வெயிலை கடித்துக்கொண்டார்கள். 

“சரி, நாளைக்கு காலையில் மகாபலிபுரம் போவோம். வரும்போது சாய்ந்திரம் திருவல்லிகேணி, மையிலாபூர், வடபழனி கோயிலுக்கு போகலாம். என்ன Nathan ப்ளான் எப்படி?”

“அத்த Nathanஆ?”

“ஆமாம், அமெரிகாவில் இவரு பேரு நாதன் இல்ல Nathan..”

“ஹி ஹி ஹி… “ என்று அசட்டு சிரிப்பு சிரித்துவிட்டு மாமா தொடர்ந்தார், “Perfect plan. கால ஒன்பது மணிக்கு கிளம்பலாம். What you say Nethra ?”

“மாமா நாளைக்கு எலக்‌ஷன்… நான் வோட்டு போட போகணும்”

“ம்ம்ம் ஏதோ உன் ஒரு வோட்டுல தான் யாரோ ஆட்சிய பிடிப்பாங்க போல!!” என்றாள் அத்தை.

மாமா, “கருணாநிதியோ ஜெயலலிதாவோ யாரோ ஒருத்தர்தான் வருவாங்க. What is the big deal!”

“இல்ல மாமா எட்டு மணிக்கு போலிங் ஆரம்பிச்சிடும். பக்கத்து ஸ்கூல்லதான் பூத்…”

“என்னமோ பண்ணு..”

இரவேல்லாம் இப்படியே questions and suggestionsசாகவே இருந்தது. அம்மா சொன்னாங்கனு எல்லாத்தையும் கேட்டுட்டு இருந்தேன். 
--


விடிந்தது வாக்களித்துவிட்டு வந்தேன். மாமாவும் அத்தையும் பார்கிங்கில் readyயா இருந்தனர்.

“யாருக்கு வோட்டு போட்ட நேத்திரா”.

அத்தை, “சொல்லாத சொல்லாத. Nathan this is secret”.

அடுத்த அமேரிக்க பீத்தல்- ”என்ன secret. சரி எனக்கு left-hand drive பண்ணி பழகிடுச்சு. உங்க ஊர் trafficகில் நீயே வண்டிய ஓட்டு” என்று சொல்லி என்னிடம் சாவியை குடுத்தார்.

மகாபலிபுரம் எவ்வளவு தடவ பார்த்திருந்தாலும் எதாவது reason சொல்லி கால்ல ரெக்கையக் கட்டிட்டு இவங்களுக்கு எங்கயாவது சுத்தணும். இப்போ புதுசா வாங்கிய DSLR-ரை test பண்ணாணும். வழியேங்கும் அமேரிக்க, DSLR, மஞ்சு, Heathrow airport என்று கதைகள் சொல்லிக்கொண்டுவந்தனர்.

ஐந்து மணிக்கு மீண்டும் சென்னை. முதலில் திருவல்லிகேணி. கோயிலுக்குள் நுழைந்ததும் மாமா, “எவ்வளவுதான் நாம வேளியில சுத்தினாலும் கோவிலுக்குள்ள வந்த ஒரு அமைதி”.

“அது அவங்க அவங்க மனசு பொருத்தது” என்றேன்.

“இருந்தாலும் temple is special. Don’t compare it with others”

“ஒரே எண்ணம் இருக்குறவங்க ஒரு எடத்துல ஒண்ணாயிருந்த அங்க ஒரு positive force இருக்கும். உதாரணத்துக்கு சினிமா தியேட்டர். So எண்ணம்தான் முக்கி..”

“கோவிலும் சினிமாவும் ஒண்ணா. இது நம்ம கலாசாரம்”

“சினிமாவும் நம்ம கலாசாரத்துல இப்போ ஒண்ணாயிடுச்சு மாமா”

”உங்க வாதத்தை வீட்டுல போய் வெச்சிக்கலாம். போசாம வாங்க” என்றாள் அத்தை.


கடைசியாக வடபழனி கோயில். அன்னிக்கு ஏதோ விஷேசம் போல. பல்லாகுல சாமி சிலைய தூக்கிட்டு கோயில சுத்தி வந்தாங்க. 

”ஆஹா என்ன தரிசனம்” என்று கூறி அத்தை கன்னத்தில் போட்டுக்கொண்டாள். எனக்கு பல்லாக்கு தூக்குபவர்களைப் பார்த்ததும் பரிதாபமாக இருந்தது. சாமி சிலையுடன் ஒரு ஆசாமியும் மேலே இருந்தார்.

கோயிலை மூன்று முறை சுற்றினார்கள். என்னையும் கூட சுற்ற சொன்னார்கள்.

“இவ்வளவு கஷ்டப்பட்டு பல்லாக்க எதுக்கு தூக்கணும்” என்றேன்.

மாமா, “சாமிக்கு செய்யணும்னா புண்ணியம் பண்ணியிருக்கணும்”

“இதுல பாவம் புண்ணியம் எங்க இருந்து வருது. சாமி சிலைய விட ஆசாமிதான் weight-அ இருக்கார்”

மாமாவின் முகம் மாறியது, “ஒழுங்க இன்ஜினியரிங் இல்ல கம்பூய்ட்டர்ஸ் படிச்சுட்டு இந்நேரம் அமேரிக்கவுல இருந்திருக்கலாம். அதவிட்டு English literature, journalismனு கண்ட புக்ஸ் படிச்சி உன் அப்பா புத்தி அப்பாடியே..” என்று கூறிமுடிப்பதற்குள் அத்தை குறுக்கிட்டாள்.

“இவளுக்கு என்ன தெரியும் சின்ன பெண்ணு”

காரை எடுக்க சென்றோம். எப்போதும் பேசிக்கொண்டே இருக்கும் மாமா silentஆக வந்தார். 

காரில் அமர்ந்தபின் மாமா, “நீ என்ன பாரதி கண்ட புதுமைப்பெண்ணா !!”.

“இப்போவறைக்கும் இல்ல. ஆனா இருந்த என்ன தப்பு”.

“இல்ல… அவரு மாதிரி எதாவது புரட்சி பண்ணப்போறிய”

”அவரு என்ன புரட்சி பண்ணாரு ?”

கொஞ்சம் யோசித்தவர், “அதுதான்.. பாட்டு எழுதினாரு.. கதை எழுதினாரு.. அப்புறம் செரியில் இருக்குறவங்களுக்கு பூணல் போட்டாறு..”

“அதுக்கு பதில, அவரு வீட்டுப்பக்கதுல இருக்கும் பசங்களை பிடிச்சி சாக்கடை அள்ள வெச்சிருக்கலாம். அது இத விட புரட்சியாயிருக்கும்” என்றேன்.

இதை கேட்டதும் பின் சீட்டில் இருந்த அத்தை “what tha..” என்று கூறி நிருத்திக்கொண்டாள்.

மாமா, “நீ உங்கப்பனேதான்”.

காரை சரவண பவன் பார்கிங்கில் நிறுத்தினேன். யாரும் இறங்கவில்லை.

மாமா, “நீ சரிப்பட்டு வரமாட்டே. மஞ்சுவுக்கு வே..”

வழக்கம்போல் அத்தை குறுக்கிட்டு, “Nathan, என்ன சொல்லணுமோ ஜானகி கிட்ட சொல்லுங்க”

மூன்று பேரும் இறங்கி ஓட்டலுக்குள் சென்றோம்.

---


***Above art work is also by the blogger

Friday, October 23, 2015

சார் நீங்க என்ன ஜாதி ?



சமீபத்தில் மத்திய அரசு அலுவலகத்தில் வேலை செய்யும் ஒரு உறவினருடன் பேசும்போது அவர் தன்னுடன் பணியாற்றும் அனைவரையும் அவர்களின் சாதியின் பெயரைக் கூறிப்பிட்டுப் பேசினார். சம்பந்தமே இல்லாமல் இவர் எதற்கு சாதியை இழுக்கிறார் என்று நினைத்தேன். உறவினர் என்பதால் நான் அதற்கு எதிர்வினைக் கூற முயலவில்லை. 

வேறு பல சந்தர்பங்களில் நான் தெரிந்துக்கொண்டது- அரசு வேலையில் இருப்பவர்கள் அனேகமாக தங்களுடன் பணிபுறியும் சக ஊழியர்கள் எந்த எந்த சாதியினர் என்பதை அறிந்து அதற்கு எற்றாற்போல் செயல் படுகின்றார்கள்.

அரசுத்துறை இப்படி இருக்க தனியார் மட்டும் என்ன விதிவிலக்கா? சாதி வாரியான இட ஒதுக்கீடு இல்லையே தவிர சிலர் மனதில் சாதியையும் மதத்தையும் சுமந்துக்கொண்டு தான் இருக்கின்றார்கள்.

நான் கேட்ட சில “சாதி” ரிதியான வாக்கியங்கள்,

“..அவளுக்கு என்ன __ராச்சே. எங்க போனாலும் பொழச்சிப” 

“..இந்த __ பயலுங்களே இப்படித்தான்”

இப்படி சாதியை மேற்கொள் காட்டி ஒருவரின் character-ரை தீர்மானிக்கின்றனர். அரசுத்துறையில்லாவது application form முதல் எல்லா bio-date/profile formகளில் சாதியை கூறிப்பிடவேண்டும். ஆனால் தனியார்துறையில் அப்படி இல்லை. இப்படி இருக்கையில் எப்படி எப்படியோ துருவி அடுத்தவனின் சாதியை கண்டுபிடிக்கும் சகாக்களே வாங்குற சம்பளத்துக்கு கொஞ்சமாவது வேலை செய்க!!

Above picture by the blogger for illustration purpose only :-)