தலைப்பை படித்தவுடனே இது ஏதோ காதல் பற்றிய கட்டுரை என்று மட்டும் நினைக்கவேண்டாம். காதலாகவும் இருக்கலாம்! ஏன் நண்பன், நண்பி(தோழி!), குடும்ப உறவுகள் பற்றியதாகவும் இருக்கலாம்.
நாம் பலரும் உணர்ந்துள்ள தருணம்தான் இந்த பிரிவும் வருகையும். நம்ம கூட சில காலம் வாழ்ந்த நபர், திடீர் என்று ஒரு நாள் நம்மைவிட்டு பிரியநேரிடும் தருணத்தை உணர்ந்துள்ளீர்களா? உதாரணத்திற்கு- ஒரே அறையில் தங்கி ஒரே ஆபிஸில் கூடவே வேலை செய்த ஒரு தோழி திடீர்னு ஒருநாள் வேறு ஊருக்கு மாத்தலாகி செல்கிறாள். அவளை ரயிலில் வழி அனுப்பிவிட்டு வந்து அறையை திறந்த அந்த நேரம்.. அந்த நிமிடம்.. அவள் இல்லாத அறைக்குள் வரும்போது ஒரு உணர்வு வரும். அந்த உணர்வைத்தான் நான் தொட\தேடி பார்கின்றேன். இந்த பிரிவு இறப்பாக இருந்தால் மிகவும் கொடுமையாக இருக்கும்.
எனது நண்பன் ஒருவனுக்கு Fanta என்றால் மிகவும் பிடிக்கும். தம்மடிக்கும் போது அவனுக்கு Fanta இருந்தாக வேண்டும். அவன் எனது பள்ளிக்கூட நட்பு. சில வருடங்களுக்கு முன் அவன் ஒரு விபத்தில் இறந்துவிட்டா, அவனது இறுதி பயணத்தில் கலந்துகொண்டு, காலையிலிருந்து எதுவும் சாப்பிடாமல் இருந்த நான் கடைக்கு சென்று Fanta என்று கேட்க, கடைக்காரரும் அதை உடைத்து எனது கையில் கொடுத்தார். நான் அதை ஒரு வாய் குடித்ததும், இறந்த நண்பனுடைய நியாபகம்தான் வந்தது. அதுவறை அமைதியாக கண்ணீர் விட்டு அழுத நான், அப்போது என்னை அறியாமல் சத்தமாக அழுதேன்.
சென்றவர்/இறந்தவர் உபயோகித்த பொருட்களைப் பார்த்து அவர்களை நினைத்துக்கொள்வது சினிமாதனமாக இருக்கலாம். ஆனால் இது எல்லோருடைய வாழ்க்கையிலும் நடந்திருக்கும். அந்த உணர்வைத்தான் நான் தொட\தேடி பார்கின்றேன்.
பிரிவு/இறப்பு இப்படி இருக்க, பிறப்பயும் நாம் உணர்கின்றோம். ஒரு பிறப்பும் நம்மிடம் மாற்றத்தை உண்டுபண்ணுகிறது. உதாரணத்திற்கு- ஒரு வீட்டில் ஒரு குழந்தை பிறகின்றது. விட்டில் உள்ள எல்லோரும் அந்த குழந்தைக்காக தங்கள் வாழும்முறையை மாற்றிக்கொள்கின்றர்கள். இது எதிர்பார்க்கப்பட்ட வருகை. 9 மாதங்களாக அந்த குழந்தை கருவாக அந்த வீட்டில்தான் இருந்தது. பல பேச்சுக்கள் அதன் காதில் விழுந்திருக்கும்- அப்பா அம்மாவின் இடையே நடக்கும் ஊடல்\சண்டை உரையாடல்கள், பாட்டி(மாமியார்) தன் அம்மாவை (மருமகளை) விழுந்து விழுந்து கவனிப்பது, அப்பா பார்க்கும் T20 cricket, அம்மா படிக்கும் சுஜாதாவின் கதைகள், இப்படி எல்லாவற்றையும் கவனித்த அந்த குழந்தை ஒரு நாள் ரத்தமும் சதையுமாக வீட்டில் உள்ளவர்கள் பார்க்கும்போது வரும் அந்த உணர்வு, பிரிவு எற்படும்போது வரும் உணர்வுக்கான நேர்மறையோ?.