Monday, February 20, 2017

மரணம்...


நான் எப்போதும் பலசரக்கு வாங்கும் கடைக்கு ஒரு மாதம் இடைவெளிவிட்டு சென்றேன். எப்போதும் சிரித்த முகத்தோடு, நெற்றியில் சந்தனமும் குங்குமப்பொட்டிட்டு கல்லாவில் இருக்கும் முதலாளி அங்கு இல்லை. வெளியில் எங்கேயோ சென்றிருக்கலாம் என்று நினைத்து, பொருட்களை எடுத்தப்பிறகு பணத்தை கொடுக்க கல்லாவுக்கு அருகில் வரும்போதுதான் அதை கவனித்தேன். அவரது படத்துக்கு மாலை போட்டிருந்தார்கள். விசாரித்ததில் அவர் இறந்து மூன்று வாரமாகிறது என்று சொன்னார்கள்.

மரணம், சாவு, இறப்பு என்ற வார்த்தைகளை நாம் கேட்டவுடன் ஒரு சோகம் நம்மை தொற்றிக்கொள்கிறது. சாலையில் தார தப்பட்டைகளுடன், பூக்களை தூவி, பட்டாசுவெடித்து ஆரவாரத்துடன் செல்லும் ஒரு மனிதனின் இறுதி பயணம், ஆரம்பிப்பது என்னோவோ அமைதியாக, யாருக்கே தெரியாமல்தான். (நான் இங்கு குறிப்பிடுவது ஒரு உயிரின் ஆரம்பம். நான்கு சுவருக்குள் நடப்பது. இது வேறு விடையம்)

தொலைப்பேசியில் யாராவது இறந்த செய்தியை சொன்னால் ஒரு நொடி நாம் என்ன சொல்வது என்று தெரியாமல் இருப்போம். சாவுக்கு செல்லும்போது ஒரு வித இறுக்கும் இருக்கும். அங்கு மரணித்தவர் உடலைப் பார்க்கும்போது உறக்கத்தில் இருப்பவர்போலவே இருக்கும், எந்த நேரத்திலும் அவர் எழுந்துவிடமாட்டாரா என்று எனக்கு தோன்றும்.

வாழ்க்கையில் நமக்கு நடக்கும் அதீத இன்பமான மற்றும் துன்பமான தருணங்கள் நம் நினைவில் எப்போதும் இருக்கும். சாவு வீடுகளுக்கு சென்ற நினைவுகள் நம் மனதில் தங்கிவிடும். மேலும் இறப்பு\பிறப்பு எப்போதும் நடக்கும் ஒரு நிகழ்வு இல்லை.

சொந்த பந்தங்கள் அழுது இறுதிசடங்குகள் செய்து முடித்தபின், எரித்தோ புதைத்தோவிட்டால் அந்த மனிதனின் அத்தியாயம் முடிந்துவிடும். எல்லோரும் சென்ற பின், மயானத்தில் ஒரு அமைதி. நம் கண் முன் இருந்த உடல், அடுத்த சில நொடியில் காணாமல் போய்விடுகிறது. மிஞ்சி இருப்பது அவரது எண்ணங்கள் மட்டுமே. ஆரவாரத்தோடு வந்த பயணம் இறுதியில் பிறப்பைப் போலவே அமைதியாக முடிந்துவிடுகிறது.