இது புத்தகங்களைப் பற்றிய வரலாறு இல்லை, நம் வீடுகளில் உள்ள புத்தகங்கள் நம் வாழ்க்கையில் எப்படியெல்லாம் பயணிக்கின்றது என்பதைப் பற்றியது.
புத்தகங்கள் நம் வீடு வந்து சேர்ந்ததும் அதன் வரலாறு ஆரம்பமாகிவிடுகிறது. நாம் வாங்கும் புத்தகங்கள் எல்லாவற்றையும் நாம் படிப்பபதில்லை, சில சமயம் நாம் வாங்காத புத்தகங்கள் நாம் படித்தப்பிறகும் நம் அறையில் எப்போதும் இருக்கும்.
”பிரதாப முதலியார் சரித்திரம்” புத்தகத்தை வாங்குவதற்காகவே 2014ல் புத்தக கண்காட்சிக்கு இரண்டாவது முறையாக சென்றேன். அன்றிரவே, நான்கு அத்தியாயங்களை முடித்துவிட்டேன். மறுநாள் அலுவலகத்தில் புத்தகம் படிக்கும் பழக்கமில்லாத ஒரு நண்பன் அதை வாங்கி சென்றான். நான் படிப்பதைவிட என்னால் ஒருவர் புத்தகம் படிக்க ஆரம்பிப்பார் என்ற ஆசை எனக்கு. அவர் படித்தார், ஆனால் அந்த புத்தகம் இதுவரை என் கையிக்கு திரும்பவே இல்லை. நண்பரின் அறையில் இருந்த அவரது நண்பர் எடுத்துச் சென்றார், அங்கிருந்து திண்டுக்கல், மதுரை என்று ஊர் சிற்றிவிட்டு இப்போது மீண்டும் வெளச்சேரிக்கே வந்திருப்பதாக தகவல்.
1984 சென்னையில் என் மாமவின் நண்பர் ஒருவர் “சாக்ரேடிஸ்-திருவள்ளுவர்” பற்றிய ஒரு ஒப்பீடு நூல் வாங்கினார், அது அவரது சொந்த ஊர் ராமநாதபுததுக்கு சென்றது, அங்கிருந்து வாணியம்பாடியில் இருக்கும் அவரது கல்லூரிக்கு, அங்கிருந்து என் மாமாவின் கிருஷ்ணகிரி வீட்டுக்கும் சென்றது. இப்போது என்னிடம் சென்னைக்கு மீண்டும் வந்துள்ளது.
இப்படி பல கதைகளும் வரலாறுகளும் புத்தகங்களுக்குள் இருக்கும். பல சமயங்களில் நாம் வாங்காத புத்தகங்கள் நம்முள் ஒரு தாக்கத்தை எற்படுத்திவிடும். Bus 9 to Paradise என்ற புத்தகத்தை பெங்களூரில் ஒரு நடைப்பாதைக் கடையில் வாங்கினேன். அப்போது என்னுடன் இருந்த நண்பனுக்கு அந்த புத்தகம் வேகுவாக கவர்ந்துவிட்டது. அவன் வேலை தேடி அலைந்த நாட்களில் அவனுக்கு அந்த புத்தகம் மிகுந்த நம்பிக்கை அளித்தது என்று இன்றும் என்னிடம் கூறுவான். அவனோடு அந்த புத்தகம் பல இந்திய நகரங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் பயணப்பட்டது. இன்றும் அது அவனது இல்லத்தில்தான் உள்ளது. நான் வாங்கியது!
நான் ஒவ்வொரு முறையும் பழய புத்தகக் கடையில் உள்ள புத்தகத்தை கையில் எடுக்கும் போது, ”இதற்கு முன்னால் இந்த புத்தகத்தை யார் படித்திருப்பார்கள், எந்த எந்த ஊர்களில் இது பயணப்பட்டிருக்கும்” என்று எண்ணுவதுண்டு (காரகாட்டகாரன் படம் கார் போல!). சில புத்தகங்களில் பழைய உரிமையாளரின் பெயர் இருக்கும், சில வாக்கியங்கள் அடிக்கோடிட்டு இருக்கும். ”அட நமக்கு பிடிச்ச வரி அவருக்கும் பிடிச்சிருக்கே” என்று மனதில் ஒரு சிறு ஆச்சரியம். நம் எண்ணமும் அவர் எண்ணாமும் ஒத்துப் போகும்போது யாரோ முகம் தெரியாத ஒருவரிடம் நமக்கு நட்பு உண்டாகுவது போல் இருக்கும்.
உணவு செறித்துவிடும், உடை கிழிந்துவிடும், காலம் கடந்துவிடும். ஆனால் நம் வீட்டில் இருக்கும் புத்தகங்கள் நம்மை பார்த்துக்கோண்டே நமது வரலாறை அதன் பக்கங்களில் நிரப்பிக்கொண்டே இருக்கும்.
No comments:
Post a Comment